அகரமும் ஆதிபகவனும்
எந்த மொழி பேசும் தாய் தந்தையருக்கும் பிறக்கும் எந்த ஒரு குழந்தையும் செய்யும் முதல் வேலை என்ன? பிறந்ததும் வாயை திறக்காமல் அழுத குழந்தையை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா?
உலகில் எந்த நாட்டிலும் ஒருவர் வாயை திறந்தால் வரும் முதல் சப்தம் 'அ' மட்டும் தான். அப்படி குழந்தை அழுவது சப்தம் உண்டாக்குவதற்க்கும் அதன் மூலம் சுவாசத்தையும் சக்தியையும் உள்வாங்குவதற்காக என்று எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா?
முதல் சப்தத்தில் முதலில் வரும் சப்தம் அல்லது அதிர்வு 'அ'து பிறகு உகாரமாகி நீண்டு பின் மகாரமாகும் போது 'ம்' பிறந்து அது முதலோடு இணைந்து "மா" என்று மாறும்போது பெற்ற தாய் நம்மை வாரி அணைத்து பாலூட்ட தொடங்குகிறாள். வாழ்க்கை துவங்குகிறது!
இதனால் தான் தமிழ் மொழி மட்டுமல்ல இந்தியாவின் ஏன் உலகின் தலையாய மொழிகளெல்லாம் துவங்குவது அகரத்தில் தான். "அ" என்ற ஒலியில் தான் மொழிகளும் அவற்றின் எழுத்துகளும் துவங்குகின்றன.
தமிழ் மொழி அனாதியாக நின்ற அகரத்தை உயிர் என்று பெயரிட்டது. உடன் பிறந்த 10 பிராணன்களையும் எழுத்தாக்கி உயிர் எழுத்துகள் என அழைத்து அத்துடன் வித்தையை ஆயுத எழுத்தென்று அமைத்தனர்.
மேலே ஒரு திலகத்துடன் நின்ற மற்ற தமிழ் எழுத்துக்களை மெய் (உடல்) என்றும் உடலும் உயிரும் இணைந்து உயிர் மெய் எழுத்துகள் வந்து அவற்றினின்று சொற்களும் வார்த்தைகளும் இலக்கியங்களும் வெளிப்பட வாழ்க்கை வளர்ந்தது.
தமிழ் மொழி மட்டுமல்ல தமிழின் தலையாய நூலான திருக்குறள் துவங்குவதும் அகரத்தில் தான்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
வியாபாரம் செய்ய முதலில் இட்ட பொருளை முதல் என்று சொல்கிறோம் இல்லையா? அதுபோல ஒவ்வொரு குழந்தையும் தன் வாழ்வை துவக்கிய மூச்சை முதல் எனக்கொண்டால் அதை நமக்கு கடனாக தந்தது யார்? யாரோ நம்மை தாய் வயிற்றிலிருந்து வெளியில் தள்ளிவிட்டதால் தானே முதல் மூச்சு கிடைத்தது? அதனால் தானே இந்த வாழ்க்கை என்ற வியாபாரம் தொடங்கியது?
தாயின் வயிற்றிலிருந்த ஒரு காற்று (சஞ்சயன் என்று சித்த பரம்பரை அழைக்கும்) அது நம்மை தள்ளி விட்டது என்று நம்பினால் அது நமக்குள்ளும் இருக்கிறது. நமது மரணத்துக்கு பிறகு 41 வது நாள் இந்த உடலை இல்லாமல் செய்ய வெடித்துக்கொண்டு வெளியே செல்லும் இந்த சஞ்சயன் என்று யோகவியல் சொல்வதை பிறகு யோசிக்கலாம்.
தாயின் உதிரத்தில் ஆனந்தமாக உண்டான ஒரு லிங்க உருவை தாயின் வயிற்றில் சென்ற உணவிலிருந்த பிராணன் வளர்த்து வடிவம் கொடுத்தது. தாயின் உடலிலிருந்த பிராணன் ஒரு நாள் வெளியே தள்ளி விட்டதும் அந்த குழந்தை தானே காற்றிலிருந்து பிராணனை எடுக்க கற்றுக்கொண்டது.
நம்மை சுதந்திரமாக வாழவேண்டி வெளியில் தள்ளி விட்ட முதல் சக்தியை ஆதி என்றும் அது முதல் கூடவே இருந்து நம்மை ஒவ்வொரு வினாடியும் வழி நடத்திக்கொண்டிருக்கும் சக்தியை பகவன் (குரு) என்றும் சொல்வது சரி தானே?
இப்போது முதல் குரளுக்கு வருவோம்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
எப்படி எழுத்துகளுக்கெல்லாம் 'அ' என்ற சப்தம் முதலாக இருக்கிறதோ அது போல நமக்கு தென்படும் இந்த உலகிற்கு முதலாக இருப்பதும் நம்மை இங்கே தள்ளி விட்டதும் ஒவ்வொரு கணமும் வழி நடத்துவதும் ஒரு சக்தியே.
அந்த சக்தியை
ஆதி என்று சொன்னால் பழம் பெரும் சைவர் அதை சிவம் என்று அறிந்து இணைந்திருப்பர்.
பகவான் என்று பகர்ந்தாலோ வைதீக வைணவர் திருமால் என்றுளம் மகிழ்ந்து பக்தி செய்வர்.
ஆதிபகவன் என்றால் சாது சமணரும் பௌத்தரும் தமது முதல் குரு என்றுணர்ந்து தியானிப்பர்.
ஆல்ஃபாவாக இருப்பதும் உலகை நமக்கு தந்தவரும் பரமபிதா என்றாலோ கிறிஸ்துவர் அணைத்துக் கொள்வர்.
'அ' வில் துவங்குவது ஆண்டவன் நாமம் அவனே உலகுக்கு முதல் எனில் ரூபத்தில் லயிக்காத இஸ்லாமியர் ஏற்று தொழுவர்.
நாம ரூபங்களில் லயிக்காத யோக நெறியில் நிற்பவர்களோ அந்த சக்தியை தன்னுள்ளே தானே உணர்ந்து இந்த குரளுக்கு அர்த்தமாக வாழ்ந்திருப்பார்கள்.
இவ்வாறு உலகில் தோன்றி நின்றிருக்கும் மதங்களும் அதன் வழி நிற்கும் மனிதர்கள் எல்லோரும் தொழும் தெய்வம் ஒன்றே என்பதும் அது நமக்கு அந்நியமானதல்ல என்பதும் இந்த குறளிலிருந்து கற்றுக்கொள்ள முடிந்திருந்தால் இந்த கட்டுரையை எழுதியபோது நின்று தந்த மூச்சுக்காற்று வீணாகவில்லை.
Tags:
Tamil Wisdom